தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து தமிழக அரசியலில் பெரும் அதிகார மாற்றம் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரபலங்களும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருவர், அந்த கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைய முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு பெண் கவுன்சிலர் மற்றும் ஒரு ஆண் கவுன்சிலர், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அவர்களுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த உள்ளூர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் பலரும் த.வெ.க.வில் இணைய தயாராகி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள த.வெ.க.வின் பொதுச் செயலாளரான அமைச்சர் ஆனந்த் முன்னிலையில், அவர்கள் தங்களை த.வெ.க.வில் முறைப்படி இணைத்துக் கொள்ள உள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் அந்தந்த பகுதி நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே பிற கட்சிகளில் இருந்து த.வெ.க.-வில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் முக்கிய பங்காற்றி வரும் கவுன்சிலர்கள், திடீரென கட்சியைவிட்டு விலகி த.வெ.க.வில் இணைவது, குமரி மாவட்டத்தின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:-ஆளும் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், தங்கள் தொகுதி வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் நலன் கருதி, முக்கிய நிர்வாகிகள் பலரும் த.வெ.க.வின் பக்கம் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது உள்ளாட்சி அரசியலில் அ.தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்,” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கவுன்சிலர்கள் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பலரும் த.வெ.க.வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில் இன்னும் பல முன்னணி நிர்வாகிகள் மாற்று கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.