தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்களில் இருந்து இதுவரை மொத்தம் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக நூலகத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் இடம் பெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிப்படுத்திய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நூலகத்தில் இடம்பெற்றிருந்த புத்தகங்களின் நம்பகத்தன்மை தொடர்பாகக் கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து கோவை பெரியார் அறிவுலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் பெயர்களில் இடம்பெற்றிருந்த 1,000-க்கும் மேற்பட்ட போலி நூல்கள் அகற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, போலியானவை எனக் கண்டறியப்பட்ட நூல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்களில் இருந்து இதுவரை மொத்தம் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக நூலகத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள் AI மூலம் உருவாக்கிய புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும் என்றும், தொடர்ந்து போலி புத்தகங்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.