கோவையை தொடர்ந்து அதிரடி ஆய்வு: தென்காசி மாவட்ட நூலகத்தில் 2,200 போலி நூல்கள் அகற்றம்

புத்தகங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.
நூலக அலமாரியில் இருந்து அகற்றப்பட்ட அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
நூலக அலமாரியில் இருந்து அகற்றப்பட்ட அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
Published on: 
Summary

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் 2,200 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இப்புத்தகங்கள், தி.மு.க. ஆட்சியில் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், நூலக ஊழியர்கள் புத்தகங்களை தனி அறைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை காந்​திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்​பில் பெரியார் அறிவுலகம் எனப்​படும் நூல​கம் மற்​றும் அறி​வியல் மையம் கட்டப்பட்டு, கடந்த மாதம் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டது.

போலி நூல்கள் அகற்றம்

இந்​நிலை​யில், பெரியார் அறி​வுல​கத்​தில் அகல்​விளக்கு மற்​றும் பீனிக்ஸ் பதிப்​பகத்​தின் பெயர்​களில், செயற்கை நுண்​ணறிவு மூலம் தயாரிக்​கப்​பட்ட போலி நூல்​கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்​கப்​பட்​டுள்​ள​தாக புகார்​கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்தப்பட்டு போலி நூல்கள் அகற்றப்பட்டன.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் சர்ச்சைக்குரிய அகல்விளக்கு பதிப்பகத்தில் உள்ள புத்தகங்கள் எத்தனை உள்ளது? அவை எப்போது வாங்கப்பட்டது? அவற்றின் விலை என்ன? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார்.

தென்காசியில் ஆய்வு

அதன்பேரில் தென்காசி மாவட்ட மைய நூலகத்தில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட சுமார் 2,200 போலி புத்தகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட புத்தகங்களை நூலக அலமாரியில் இருந்து அகற்றினர். மேலும் அகற்றப்பட்ட புத்தகங்களை நூலக ஊழியர்கள் தனி அறைக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புத்தகங்களில் பெரும்பாலானவை ரூ.1,000-க்கும் அதிகமான விலை கொண்டவை என கூறப்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் கொள்முதல்

இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் நூலக ஊழியர்கள் கூறியதாவது:-

இந்த புத்தகங்கள் அனைத்தும் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் இருந்து நூலகங்களுக்கு வரத் தொடங்கின. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த புத்தகங்கள் அனைத்தும் பெறப்பட்டது.

நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா சுப்பிரமணியன், மனிஷா அர்ஜுன், மோகனா ரவி, மோகனா பால்ராஜ், கலை முருகன், தாமரை பன்னீர், ரிஷ்டேவன் மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டு இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்களின் கொள்முதல் விலை ரூ.27 லட்சம் ஆகும்.

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து வாங்கப்பட்ட நூல்களின் மதிப்பை விட இந்த தொகை அதிகம் ஆகும்

தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு கடந்த 2024-ம் ஆண்டு தான் தான் மாவட்ட நூலகம் உருவாக்கப்பட்ட நிலையில் இங்கு அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து இவ்வளவு பெரிய தொகைக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களை வாங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அகல் விளக்கு பதிப்பகத்துக்கு மற்ற பதிப்பகங்களை விட விரைவாக பணம் வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நூலகங்களிலும் இந்த பதிப்பகத்தின் புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை அலமாரிகளில் இருந்து அகற்றும் பணி தொடங்கி உள்ளது. சில நூலகங்களில் இந்த புத்தகங்கள் அடங்கிய பெட்டிகள் கூட திறக்கப்படாமல் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டத்தில் நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2,200 புத்தகங்கள் போலியானவை என கூறி அகற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே போலி புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தும் போது, நூலகத்தில் இருந்து அகற்றப்பட்ட புத்தகங்களின் விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று நூலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

X