எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, அங்கிருந்த ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்களின் படகுடன் சேர்த்து பலவந்தமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இத்தகைய கைது நடவடிக்கைகள் மீனவக் குடும்பங்களை நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கம்போல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடைப்பட்ட கடற்பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் திடீரென தடுத்து நிறுத்தினர். பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, அங்கிருந்த 7 மீனவர்களையும் அவர்களின் படகுடன் சேர்த்து பலவந்தமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தி வரும் கைது மற்றும் படகுகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்ய வேண்டிய துயரச் சூழல் நிலவுவதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள 7 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திர ரீதியில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவ சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.