

தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரண்டு நாட்களையும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமான 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதியா அல்லது மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியா என்பதில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அரசியல் விவாதங்கள் நிலவி வருகின்றன. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர் 1-ஆம் தேதியையே தங்கள் மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இந்த விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு தற்போதைய தமிழ்நாடு மற்றும் பல தென்னிந்தியப் பகுதிகள் மெட்ராஸ் மாகானத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்தன. தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தனி மாநிலம் கோரி பொட்டி ஸ்ரீராமுலு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1953 அக்டோபர் 1-ஆம் தேதி ஆந்திர மாநிலம் உருவானது. அதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 நவம்பர் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அன்றைய தினம் மெட்ராஸ் மாகாணத்தின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்புக்கான அடிப்படை உருவாக்கப்பட்டது.
நிலப்பரப்பு உருவானாலும் மாகாணத்திற்கு 'மெட்ராஸ்' என்ற பெயரே தொடர்ந்து நீடித்தது. இதனால் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 1956-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தார். அவரது தியாகம் இக்கோரிக்கையை வலுப்படுத்திய நிலையில், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 1967 ஜூலை 18-ஆம் தேதி சட்டமன்றத்தில் பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, 1969 ஜனவரி 14 முதல் 'தமிழ்நாடு' என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
இந்த வரலாற்றுப் பின்னணியில், கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிமுக அரசால் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு முதன்முதலில் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2021-இல் பதவியேற்ற திமுக அரசு, எல்லைகள் பிரிந்து சென்ற நாளைத் தவிர்த்துவிட்டுப் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று மாற்றியமைத்தது.
தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த விவகாரத்தில் சமரசப் பார்வையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, நவம்பர் 1-ஆம் தேதியை மொழிவாரி மாநில மறுசீரமைப்பில் நிலப்பரப்பு உருவான நாளாகவும், ஜூலை 18-ஆம் தேதியை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளாகவும் போற்றி இரண்டு நாட்களையும் பெருமையுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், மாணவர்களிடையே நமது மாநிலத்தின் வரலாற்றை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு நாள் விழா சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.