தமிழக செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்: எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள்- நாளை முதல் புக்கிங் ஸ்டார்ட்!

இந்தச் சிறப்பு இயக்கமானது பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, கன்னியாகுமரி மற்றும் தாம்பரம்-தென்காசி வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

வருகிற 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தயாராகி வருகின்றனர். வழக்கமான ரெயில்களில் ஏற்கனவே இடங்கள் நிரம்பிவிட்டதால், பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் தெற்கு ரெயில்வே தற்போது புதிய சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டப் பகுதிகளுக்குச் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்தச் சிறப்பு இயக்கமானது பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்களின் விவரங்கள்-நேர அட்டவணை

சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 5ஆம் தேதி இரவு 11.50 மணிக்குக் புறப்படும் ஒருவழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06151) மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.20 மணிக்குப் புறப்படும் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06152) மறுநாள் நண்பகல் 12 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து நவம்பர் 7ஆம் தேதி காலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06049) அதே நாள் மாலை 4.45 மணிக்குத் தென்காசியைச் சென்றடைகிறது. இதன் மறுமார்க்கமாகச் செங்கோட்டையில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06050) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரத்தை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நவம்பர் 3ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும், பயணிகள் அனைவரும் அதிகாரப்பூர்வ ரெயில்வே இணையதளம் அல்லது முன்பதிவு மையங்கள் மூலமாகத் தங்களின் டிக்கெடட்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT