

கடல் வழி புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணியாக, படகு போக்குவரத்து சேவையை இயக்குவதில் ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரிக்கைகளை வரவேற்றுள்ளது.
தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்குக் கடல் வழியாகப் பயணிகள் படகு போக்குவரத்து சேவையைத் தொடங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சாலைப் பயணங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான கடல் வழி பயண அனுபவத்தை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணியாக, படகு போக்குவரத்து சேவையை இயக்குவதில் ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக் கோரிக்கைகளை வரவேற்றுள்ளது. தகுதியான படகு உரிமையாளர்கள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இதில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பும் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தப் புள்ளிகளுக்கான இணையதளத்தில் tntenders.gov.in ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாளாக 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி காலை 11 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாகப் புதுச்சேரிக்குச் சாலை மார்க்கமாகச் செல்வதில் உள்ள நீண்ட நேரப் பயணத்திற்கு மாற்றாக இந்தக் கடல் வழிப் போக்குவரத்து அமைகிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புராதனச் சிற்பங்கள் மற்றும் கடற்கரைக் கோயில்களைத் தரிசித்துவிட்டு எளிதில் புதுச்சேரியை அடைய முடியும். மேலும், இப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா சார்ந்த உள்ளூர் தொழில்களும் கூடுதல் வளர்ச்சியைப் பெறும் என வணிக வட்டாரங்கள் நம்புகின்றன.
விருப்பக் கோரிக்கைகள் பெறப்பட்ட பிறகு, தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்தல், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிபார்த்தல் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடுத்தகட்டப் பணிகள் நடைபெறும். இருப்பினும், பயணக் கட்டணம், பயண நேரம், படகுகள் இயக்கப்படும் நேரம் மற்றும் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த முழுமையான விவரங்கள் தகுந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தமிழக அரசின் இந்த அதிரடித் திட்டம் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.