தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்கள் உள்ளன. இந்த இந்த இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி, பி.பி.ஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர்ந்து படிக்க மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.
நேற்று வரை 74 ஆயிரத்து 538 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது 59 சதவீதமாகும். மாணவர்கள் 29 ஆயிரத்து 83 பேரும், மாணவிகள் 45 ஆயிரத்து 436 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகள் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. 24,334 இடங்கள் இருக்கின்றன. நேற்று வரை 7044 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 3736 பேர் பணம் செலுத்தியுள்ளனர். இதே போல தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2040 இடங்களுக்கு நேற்று வரை ஆன்லைன் மூலம் 2250 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 720 பேர் பணம் செலுத்தியுள்ளனர்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காக 40 வயது வரை சேர்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. உயர்கல்வியை தொடர முடியாமல் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு தொடர்ந்து நடைற்று வரும். இதற்கு எந்த கால நிர்ணயமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு முடிந்த பிறகு அரசு கலைக்கல்லூரிகளில் அதிக அளவில் சேர வருவார்கள். இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப் போகிறது.
மேலும் கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு 10 சதவீதமும் இடங்கள் கூட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.