தமிழக செய்திகள்

நாளை மறுநாள் முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் 2 முன்னாள் அமைச்சர்கள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா செய்து இருக்கும் நிலையில் அந்த கட்சியில் இருந்து மேலும் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்த பிறகு அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் விலகி வருகி றார்கள்.

6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இதுவரை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். கடந்த மாதம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, அம்பை இசக்கி சுப்பையா ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி விராலிமலையை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அ.தி.மு.க.வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைய உள்ளனர்.

விஜய்யுடன் சந்திப்பு

இருவரும் த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைகிறார்கள். இதற்கான விழா நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அப்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஏற்கனவே த.வெ.க.வில் சேர்ந்து உள்ள பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், பச்சைமால், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி ஆகியோரும் விஜய்யை சந்திக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே த.வெ.க.வில் இணைந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கானோர்

நாளை மறுநாள் (2-ந்தேதி) பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களான ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களோடு சென்று த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் அவர்களையும் த.வெ.க.வில் இணைக்கிறார்கள். 25 ஆயிரம் பேர் வரை இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

மேலும் எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா செய்து இருக்கும் நிலையில் அந்த கட்சியில் இருந்து மேலும் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. இதில் 6 பேர் ராஜினாமா செய்து இருந்த நிலையில் சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 41 ஆக குறைந்து உள்ளது.

இதுபோன்ற சூழலில் மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் மேலும் குறையும்.

கலக்கம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அ.தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் நினைத்திருந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சந்தித்துள்ள தோல்வியால் இனி தங்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்கிற எண்ணத்தில்தான் அந்த கட்சியில் இருந்து அவர்கள் விலகி வருகிறார்கள்.

இடைத்தேர்தல்

அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் ராஜினாமா செய்து உள்ள 6 தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வுக்கு சென்றுள்ள அவர்களுக்கு த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோன்று தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்று விட்டால் அமைச்சர்களாகி விடலாம் என்ற கனவுகளோடுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.