தமிழக செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா

கடந்த 16-ந்தேதி சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் எம்.எல். ஏ.க்கள் அணி திரண்டனர்.

இவர்களில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பின்னர் மனம் மாறி எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து விட்டனர்.

கட்சி பதவிகள் பறிப்பு

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில் கடந்த 16-ந்தேதி சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

கூண்டோடு ராஜினாமா

இந்த நிலையில், திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 1000-த்திற்கும் மேற்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி இன்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் 5 வேன்கள், 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அவர்கள் அங்கு தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.

முன்னதாக அவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்றும் முறையிட இருக்கிறார்கள். சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.