சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
Published on

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் என்று அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தது.

சி.வி.சண்முகம்

பின்னர் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றிணைந்த நிலையில், சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்ட செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மோதல்

அப்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக செஞ்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கடும் மோதல் வெடித்தது. மாவட்ட செயலாளர் பசுபதியின் ஆதரவாளரை தாக்கி தர, தரவென இழுத்து சென்றதுடன், மாவட்ட செயலாளர் பசுபதியின் காரிலும் கல்வீசப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் பசுபதி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

11 பேரின் கட்சி பதவி பறிப்பு

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட 11 முக்கிய மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்ட கழக இணை செயலாளராக இருந்த ஆனந்தி, மாவட்ட பொருளாளராக இருந்த கே.வி.என்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் என்ற கிருஷ்ணன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com