மயிலாடுதுறை மயூரநாத கோவில் யானை அபயாம்பிகை லாரியில் இருந்து இறங்கும் காட்சி. 
செய்திகள்

மேட்டுப்பாளையத்திற்கு கோவில் யானைகள் வரத்தொடங்கின

தேக்கம்பட்டியில் நாளை நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளதையொட்டி கோவில் யானைகள் மேட்டுப்பாளையத்திற்க வரத்தொடங்கின.

மாலை மலர்

மேட்டுப்பாளையம்:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களில் உள்ள யானைகளுக்கு சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது. 4 ஆண்டுகள் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடைபெற்றது.

அதன்பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் நடந்து வந்தது.

13-வது ஆண்டாக யானைகள் சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம் நாளை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்கிறார்கள்.

முகாம் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு சமையல் கூடம், யானைகள் குளிக்க சவர் மேடை, யானை பாகன்கள் தங்கும் இடம், யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகள், நலவாழ்வு முகாமில் புகுந்து விடாத வண்ணம் முகாம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு மின் வேலிகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இந்த முகாமில் பங்கேற்கும் யானைப்பாகன் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அது குறித்த தகவலை தெரிவிக்கவும் அந்தந்த கோவில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுதவிர யானைகளுக்கும் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்படுவதுடன் யானை நலமாக உள்ளது என்று சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர்.

நேற்று இரவு முதலே முகாமில் பங்கேற்க உள்ள மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் யானை அபயாம்பிகை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை, மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை பார்வதி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான யானைகள் அந்தந்த கோவில்களில் இருந்து முகாமுக்கு புறப்பட்டன.

முன்னதாக அந்த யானைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. முகாமில் பங்கேற்க உள்ள யானைகளின் எடையை கணக்கிடுவதற்காக மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் எடைமேடை நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மையத்திற்கு இன்று காலை 7 மணியளவில் மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோவில் அபயாம்பிகை யானை வந்து எடைபார்த்தது.

பின்னர் அங்கிருந்து யானை லாரியில் முகாமை நோக்கி புறப்பட்டது. சரியாக 8.15 மணிக்கு மேட்டுப்பாளையம் வனப்பத்ர காளியம்மன் கோவில் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளத்திற்கு யானையை ஏற்றி வந்த லாரி வந்தது.

லாரியில் இருந்த அபயாம்பிகை யானை பாகன்கள் உதவியுடன் பத்திரமாக கீழே இறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானையும் லாரியில் இருந்து இறக்கப்பட்டது. கீழே இறங்கிய 2 யானைகளும் அங்கிருந்தவர்களிடையே துதிக்கையை தூக்கி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

தொடர்ந்து 2 யானைகளையும் பாகன்கள் வனப்பத்ர காளியம்மன் கோவில் முன்பு அழைத்து சென்றனர். அங்கு சென்றது யானைகள் துதிக்கையை தூக்கி அம்மனை வழிபட்டது. பின்னர் யானைகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டன. தொடர்ந்து நெல்லை நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை உள்பட 2 யானைகள் வந்தன.

ஒவ்வொரு யானையாக முகாமுக்கு வரத்தொடங்கியுள்ளன. இன்று மாலைக்குள் அனைத்து கோவில் யானைகளும் வந்து விடும். அதன்பின்னரே இதில் முகாமில் எத்தனை யானைகள் பங்கேற்றுள்ளன என்ற விவரம் தெரியவரும்.