சென்னை:
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றுக்காக பிரத்யேகமாக உள்ள 8 உதவி எண்களை அணுகலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி தெரிவித்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எம்.சி. சி.எஸ்.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் கண்மணிகள் அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை சென்னை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் ஜெ.விஜயா ராணி வெளியிட்டார்.
தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக சேவை அறக்கட்டளை உறுப்பினர்களிடம் மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக நடைபெறும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
குறிப்பாக ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்வதோடு குழந்தைகள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளையும் மற்றும் பிற காரணங்களால் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
குழந்தைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க புகார் எண்: 1098, தொலைபேசி எண்: 044- 2595 2450, செல்போன்: 99406 31098, குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்புக்காக சேவை செய்து வரும் குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்த தமிழ் செல்வி:- 98418 89069, ராஜ்கமல்:- 98400 83620, மோகன்தாஸ்:- 98401 35503, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்:- 99442 90306, உதவி மையத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ:- 98412 46728 ஆகியோரை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்தார்.