சென்னை:
தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை மழையை எதிர்நோக்கி மக்கள் காத்து இருக்கின்றனர். அதே சமயம் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருவது அந்த பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
சென்னையை பொறுத்தவரை கோடை மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், தமிழக கடலோர பகுதிகளில் 3 நாட்களுக்கு இயல்பான வெப்பநிலையே நிலவும். கிருஷ்ணகிரி, சேலம், கோவை போன்ற உள்மாவட்டங்களில் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கலாம். அந்த பகுதிகளில் மாலை நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
ஊட்டியில் 6 சென்டி மீட்டர் மழையும், கோவை பீளமேட்டில் 5 சென்டி மீட்டர் மழையும், குன்னூர், வால்பாறை, பவானி, தேன்கனிக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
ஏற்காடு, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, சூலூர், அவினாசி ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், சூலகிரி, பெருந்துறை, கேத்தி, அரூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பெய்தது.
குமாரப்பாளையம், திருச்செங்கோடு, ஓசூர், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி, பெரியகுளம், மேட்டூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.