புதுடெல்லி:
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கு, இலங்கை டெஸ்ட் தொடர் உதவியாக இருக்கும் என இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புஜாரா இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டி சவால் நிறைந்தது. அதற்கு முன்னோட்டமாக அமையும் விதத்தில் இலங்கையுடனான டெஸ்ட் தொடர் அமைந்துள்ளதை நல்ல வாய்ப்பாக கருதுகிறேன். தென்ஆப்ரிக்காவில் நன்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தென் ஆப்ரிக்காவுடனான போட்டிக்காக தனியாக பயிற்சி செய்வதில்லை. எந்த போட்டியானாலும் முறையான பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னரே களமிறங்குவேன். ஒவ்வொரு தொடரையும் விரும்பி ஆடி வருகிறேன்.
ஒவ்வொரு தொடரையும் புதிய தொடராகவே கருதி விளையாடி வருகிறேன். நான் விளையாடும்போது எந்த சாதனைகளையும் நினைத்து பார்ப்பதில்லை. ஆனால், சாதனை தொடர்பாக எஸ்.எம்.எஸ். வரும்போது, பெரிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் எனது பெயரும் இணைந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.