திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜிவ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணைக்காக பாறசாலை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர், மர்மமான முறையில் இறந்து போனார். ஸ்ரீஜிவ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை ஸ்ரீஜிவ்வின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், ஸ்ரீஜிவ்வின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது சகோதரர் ஸ்ரீஜித், மாநில அரசிடம் மனு கொடுத்தார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீஜிவ்வின் சகோதரர் ஸ்ரீஜித் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு கடந்த 800 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டத்துக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதுபோல இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து
ஸ்ரீஜித்துடன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீஜித்தை அழைத்து சமரசம் செய்தார். போராட்டத்தை கைவிடும்படியும், அவரது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய முயற்சி எடுக்குமென்றும் கூறினார். இத்தகவல் ஸ்ரீஜித்தின் தாயார் ரமணி பிரமிளாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும் என்ற உத்தரவு வெளியாகும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஸ்ரீஜித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் சகோதரர் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 800 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஸ்ரீஜித் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணை திருப்திகரமாக உள்ளது, என கூறினார். #sreejith#justiceforsreejith#sreejeev#Kerala#CBI #tamilnews