செய்திகள்

சஹாரன்பூர் வன்முறையை கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டம் - 50 ஆயிரம் தலித்கள் பங்கேற்பு

உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் 50 ஆயிரம் தலித்கள் பங்கேற்றனர்.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலம், சஹாரன்பூரில் மே 5-ம் தேதி உயர் சமூகத்தினரான தாக்குர் மக்கள் நடத்திய பேரணியின் போது ஒலிபெருக்கி மிகவும் சத்தமாக ஒலிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி தலித் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக வெடித்தது.

இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியானார். 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சஹாரன்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சஹாரன்பூர் நகரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தலித் சமூகத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் தலித்கள் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில் நீல நிற தொப்பிகளை அணிந்து இருந்தனர். பீம் ராணுவம் என்ற அமைப்பின் கீழ் இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தனர்.

SCROLL FOR NEXT