கரூர்:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டார். பணப் பட்டுவாடா புகாரால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அதன்பிறகு அமைச்சரவையில் இடம் பெறவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு செந்தில்பாலாஜி தற்போது தினகரன் அணியில் உள்ளார். சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம். எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இவர் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்வதற்காக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள். இதையடுத்து அவர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கரூர் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், பங்குதாரர்கள் வீடுகள், வியாபார நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில்பாலாஜியின் உறவினரான கரூர் ராம் நகரில் வசிக்கும் தியாகராஜனுக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் மற்றும் வீடுகளிலும், கரூர் கோவை சாலையில் உள்ள ஓட்டல் உரிமையாளர் சுப்பிரமணியின் நிதி நிறுவனம், ஓட்டல் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள உறவினர் சுவாமிநாதனின் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், சாயப்பட்டறை உரிமையாளர் நவரங் சுப்பிரமணி அலுவலகம், கரூர் நகர முன்னாள் அ.தி.மு.க. அவைத்தலைவர் தாரணி சரவணன், எம். ஜி.ஆர். மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் காண்டிராக்டர் சங்கர் ஆனந்த் ஆகியோர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
நேற்று 3-வது நாளாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள சுவாமிநாதனுக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திலும்,கரூரில் சில நிதி நிறுவனங்களிலும் விடிய விடிய சோதனை நடந்தது. இந்த சோதனையில் அனைத்து இடங்களிலும் தங்க ஆபரணங்கள், ரூ.1.20 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். மேலும் ரூ.50 கோடி மதிப்பிலான பினாமி சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் திண்டுக்கல் சாலையில் உள்ள ஆதரவாளர் தாரணி சரவணனின் நிதி நிறுவனத் தில் 2 நாட்களாக சோதனை நடத்தினர். இங்கு முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டதால் நிதி நிறுவனத்தை பூட்டி `சீல்' வைத்தனர். நிதி நிறுவனத்தின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் வருமான வரித்துறை சட்டம் 132(1), 132(3) ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிறுவனத்தில் உள்ள கணக்குகளையும், கணக்கு புத்தகங்களையும், நிறுவனம் சார்ந்த வங்கி கணக்குகள் உள் ளிட்டவற்றை வருமான வரித்துறை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த நிதி நிறுவனத்தில் எத்தனை சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களும் குறிப் பிடப்பட்டுள்ளது. 4-வது நாளாக நோட்டீசில் வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் சந்திரமவுலி கையெழுத்திட்டுள்ளார். இதுபோல தேவைப்படும் இடங்களில் எல்லாம் சீல் வைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டிட வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இன்று 4-வது நாளாக செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். சோதனை முடிவில் மேலும் சில நிறுவனங்களும் சீல் வைக்கப்பட வாய்ப்புள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றம் தொடர்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. தற்போது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தலில் பண பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் நிறுவனங்களில் இதுவரை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை எதுவும் நடத்தவில்லை. இருப்பினும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சோதனைக்குள்ளான செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் சென்னை, கோவை, திருச்சி ஆகிய வருமான வரித்துறை அலுவலகங்களில் ஏதேனும் ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கரூரில் வருமான வரித்துறையினர் முகாமிட்டிருப்பதால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிதி நிறுவனங்கள் பூட்டி கிடக்கின்றன.