சேலம்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் பருவ மழை தொடங்கும் முன்பே கடந்த மே மாதம் இறுதியில் கோடை மழை தொடங்கியது. தென்மேற்கு பருவ மழையும் கடந்த வாரம் தொடங்கியதால் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்பட பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்வதால் காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான மைசூரு, மாண்டியா, ராம்நகர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1297 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 1078 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 68.95 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் முக்கிய துணை நதியான கபினி நதி கேரளாவில் உற்பத்தியாகிறது. இந்த நதி உற்பத்தியாகும் வயநாடு மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் கபினி அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 795 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளை போல காவிரியின் குறுக்கே உள்ள ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 4 அணைகளின் நீர்மட்டமும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே கர்நாடகாவில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
அந்த அணைகள் நிரம்பும் போது தமிழகத்திற்கும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.