லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை கற்பழித்து விட்டதாக ஒரு இளம்பெண் போலீசில் புகார் அளித்திருந்தார். கற்பழிப்பு புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்தி அந்த பெண்ணின் தந்தையை எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் கொடூரமாக தாக்கியதாக மற்றொரு புகாரும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஒரு பழைய வழக்கு தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை பப்பு என்னும் சுரேந்திரா சிங்கை கடந்த 5-ம் தேதி கைது செய்த போலீசார் உன்னாவ் மாவட்ட சிறையில் அடைத்தனர். ஆனால், கற்பழிப்பு புகாரின்மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தாருடன் நேற்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்-தை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூற பாதுகாவலர்கள் அனுமதிக்காததால் முதல்வர் வீட்டின் அருகே அவர் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், உன்னாவ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங் இன்று உயிரிழந்தார். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சுரேந்திரா சிங் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருந்த சுரேந்திரா சிங் மரணமடைந்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேச அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில், சிறுமியை காப்பாற்றுங்கள். இளம்பெண் ஒருவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தன்னை கற்பழித்ததாக குற்றம் சாட்டினார். போலீசாரோ அந்த எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக அந்த பெண்ணின் தந்தையை கைது செய்துள்ளனர். போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்ட அவர் மரணமடைந்துள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வோ சுதந்திரமாக சுற்றித்திரிகிறார், என டுவிட் செய்துள்ளார்.