புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது.
கடந்த மே மாதம் 13-ந்தேதி ரங்கசாமி முதல்-அமைச்சராகவும், பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அவர்களுக்கு இலாகா எதுவும் ஒதுக்கவில்லை. மீதமுள்ள 3 அமைச்சர்களும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 17-ந் தேதி என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ராஜவேலு, சிவகொழுந்து, பாஜகவை சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தேர்தல் முடிவு வெளியாகி 1 1/2 மாதமாகியும் இதுவரை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கடந்த அமைச்சரவையில் பாஜகவுக்கு அளித்த துறைகளை தற்போதும் வழங்க வேண்டும் என பாஜகவினர் கேட்டு வருகின்றனர்.
ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை உட்பட முக்கிய துறைகளை பாஜகவுக்கு வழங்க முன்வரவில்லை. இதனால்தான் இலாகா ஒதுக்குவதில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வருகிறது. அதோடு சபாநாயகர் பதவியும், பாஜக கேட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, துணை சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு வழங்குவதாக கூறியுள்ளார். இதற்கும் பாஜகவினர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுவைக்கு வந்தார். அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரின் இல்ல வளாகத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் சந்தித்து பேசினார்.
அப்போது கட்சி தலைமை தெரிவித்த கருத்துக்களை அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்தார். அவருடன் மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முதல்-அமைச்சர் ரங்கசாமியை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனை என்ஆர்.காங்கிரஸ், பாஜக தரப்பு உறுதி செய்யவில்லை.
இருப்பினும் பாஜக மேலிட பொறுப்பாளர் சந்திப்பை தொடர்ந்து அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதன்மூலம் புதுவையில் தொடரும் இலாகா இழுபறிக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.