புதுச்சேரி

புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி மீண்டும் தேர்வு- கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்

வரும் 13ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவி ஏற்க உள்ளனர்.

புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதுவையில் உள்ள 30 எம்எல்ஏக்களில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

இதனிடையே என்ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். பாஜக சட்டமன்ற கட்சித்தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணி அமைச்சரவையில் பாஜகவுக்கு எத்தனை அமைச்சர்கள்? என்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நேற்றைய தினம் முதல்-அமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்து கவர்னர் கைலாஷ்நாதனிடம் கடிதம் அளித்தார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

கூட்டத்தில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில தலைவர் ராமலிங்கம், என்ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி தலைமையில் ஆட்சிஅமைக்க பாஜக, அதிமுக, லஜக கட்சிகளின் சார்பில் ஆதரவு கடிதங்களை வழங்கினர்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் எம்எல்ஏக்களுடன் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதனை லோக்பவனில் சந்திக்கிறார். அப்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோர உள்ளார். இதையேற்று கவர்னர் கைலாஷ்நாதன் ரங்கசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக முதல்-அமைச்சராக ரங்கசாமி மட்டும் பதவி ஏற்க உள்ளார். வரும் 13ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவி ஏற்க உள்ளனர்.