புதுச்சேரி

புதுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் திடீர் போராட்டம்- நோயாளிகள் பாதிப்பு

தலித் பழங்குடியின கூட்டமைப்பு, சமூக இயக்கங்கள் சார்பில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனரை பதவி நீக்கம் செய்யக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுவை அரசின் சுகாதாரத்துறையின் கீழ் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் செயல்படுகிறது.

இந்த சங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை தவறுதலாக பயன்படுத்துவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் புதிதாக பொறுப்பேற்ற எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அருள்விசாகன் கண்டுபிடித்து சுகாதார துறை இயக்குனரிடம் புகார் செய்ததாக தெரிகிறது.

ஆனால் சுகாதாரத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக புகார் செய்தவர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடுமையான வார்த்தைகளால் சுகாதாரத்துறை இயக்குனர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சுகாதாரத்துறை இயக்குனரை கண்டித்தும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழல்கள் குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் கடந்த 22-ந்தேதி ஒரு மணிநேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தலித் பழங்குடியின கூட்டமைப்பு, சமூக இயக்கங்கள் சார்பில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனரை பதவி நீக்கம் செய்யக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் அருள்விசாகன்( வயது 53) நேற்று தனது வீட்டில் அதிகளவு துாக்க மாத்திரைகளை உட்கொண்டார்.

இதனால் மயக்கமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஒன்று கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, தாங்கள் பிரச்சனையை பேச ஒன்று கூடியிருப்பதாக தெரிவித்தனர். பணியிலிருந்த சுமார் 50 டாக்டர்கள் திடீரென வெளியேறி இயக்குனர் அலுவலகம் முன்பு ஒன்று கூடியதால் அரசு ஆஸ்பத்திரியில் பணிகள் பாதிக்கப்பட்டது.