புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் 12, பா.ஜ.க. 4, அ.தி.மு.க. 1, எல்.ஜே.கே. 1 இடங்களில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தேர்தலுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவராக ரங்கசாமியும், பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நமச்சிவாயமும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டணி அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள்? என்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்து கவர்னர் கைலாஷ்நாதனிடம் கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
கூட்டத்தில், மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., எல்.ஜே.கே. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி தலைமையில் ஆட்சிஅமைக்க பா.ஜ.க., அ.தி.மு.க., எல்.ஜே.கே. கட்சிகளின் சார்பில் ஆதரவு கடிதங்களை வழங்கினர்.
தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதனை லோக்பவனில் சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரினார்.
இதை ஏற்று கவர்னர் கைலாஷ்நாதன் ரங்கசாமியை ஆட்சி அமைக்கும்படி இன்று அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக முதலமைச்சராக ரங்கசாமி மட்டும் பதவி ஏற்க உள்ளார்.
13-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ரங்கசாமி 5-வது முறையாக புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த தகவலை ரங்கசாமியே தெரிவித்தார். தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றொரு நாளில் பதவி ஏற்க உள்ளனர்.
பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதனிடையே ரங்கசாமி அளித்த ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.