புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் என மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, விதித்த நிபந்தனைகளால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தனி கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக தெரிவித்தனர். இருப்பினும் பா.ஜ.க. தரப்பில், என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமியிடம் பேசி முடிவெடுத்து மீண்டும் காலையில் வரும்படி தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை ஓட்டல் அக்கார்டில், மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா காலை 8.30 மணிக்கு தயாராகி என்.ஆர்.காங்கிரசார் வருகைக்காக காத்திருந்தார். காலை 9.30 மணிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும் என்ஆர்.காங்கிரஸ் தரப்பில் யாரும் வரவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பா.ஜ.க.வினர் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவுடன் டெல்லிக்கு புறப்பட்டனர். அவருடன் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் லாஸ்பேட்டையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அகில இந்திய தலைவர் நிதின்நபின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
என்.ஆர்.காங்கிரசின் இந்த திடீர் புறக்கணிப்பு பா.ஜ.க.வை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தனியாக தேர்தலை சந்திக்கலாமா? என ஆலோசித்து வருகின்றனர்.
தனி கூட்டணி உருவாகும்பட்சத்தில் லட்சிய ஜனநாயக கட்சி பா.ஜ.க. சின்னத்தில்தான் போட்டியிடும். இதனால் பா.ஜ.க., லட்சிய ஜனநாயக கட்சி சேர்ந்து 22 இடங்களிலும், அ.தி.மு.க., பா.ம.க.வுக்கு 8 இடங்களும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.