புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்காக புதுச்சேரி வர உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 1-ந்தேதி புதுச்சேரிக்கு வருகை தந்தார். அப்போது பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் புதுச்சேரி வருகிறார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு மிக குறுகிய காலத்தில் தேர்தல் நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நேற்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், போதிய கால அவகாசம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் வந்தால் தான், புதுச்சேரியில் நல்லாட்சி இருக்கும்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்து கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லிக்கு செல்ல உள்ளனர். அதனை கட்சி தலைமை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிக்கும். சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரி வருகிறார். அப்போது ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இதற்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் போன்ற முக்கிய தலைவர்கள் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனர். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 3 நாட்களில் தயாராகி விடும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பா.ஜ.க. கூட்டணி 14 இடங்களிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.