புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகையன்று பொதுமக்கள் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் கடுமையான விதிமுறைகளையும் நேரக் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையன்று பொதுமக்கள் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக சில முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசு வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பும் மற்றும் அதிக புகைமூட்டத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசுகளால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அதிக சத்தமில்லாமல், விளக்குகள் ஏற்றி, இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியான முறையில் தீபாவளியைக் கொண்டாடுமாறு மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளது.