புதுச்சேரி

அழுத்தத்திற்கு அடிபணியாமல் பிரதமர் மோடிக்கு, ரங்கசாமி சவால் விடுக்கிறார்- நாராயணசாமி

பாஜகவுக்கு ஆதரவாக கவர்னர் கைலாஷ்நாதன் நடந்து கொள்வதைதான் இது காட்டுகிறது. மேலும், நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு செய்வதையும் இது வெளிப்படுத்துகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்று அந்தந்த மாநிலங்களில் நிர்வாகம் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரியில் மே 4-ந்தேதி தேர்தல் முடிவு வந்தப் பிறகுதான் முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அதற்குப் பிறகு 15 நாள் கழித்துதான் மீதியுள்ள 3 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இப்போது முழுமையான அமைச்சரவை அமைந்துள்ளது. ஆனால் அமைச்சர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை.

மேலும் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிற மாநில முதல்வர்கள்கூட சம்பிரதாயத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளனர்.

ஆனால் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுவரை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட யாரையும் சந்திக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆகியோரை பலவீனப்படுத்தும் பாஜக புதுச்சேரியில் ரங்கசாமியை ஒன்று செய்ய முடியவில்லை. பிரதமர் மோடிக்கு ரங்கசாமி சவால் விடுக்கிறார்.

மேலும், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாஜகவின் அடிமையாகச் செயல்பட்டார் என்று விமர்சனம் செய்திருந்தேன். இப்போது புதியதாக அமைந்துள்ள ஆட்சியில் 11 எம்எல்ஏக்கள் என்னிடம் இருக்கின்றனர்.

பாஜகவுக்கு தான் அடிமையில்லை என்ற வகையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடு இருக்கிறது. புதுச்சேரியில் சபாநாயகர் பதவியைத் தங்கள் கட்சிக்குக் கொடுக்க வேண்டியும், முக்கிய இலாகா கேட்டும் பாஜக அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நடந்து கொள்கிறார். புதுவை பாஜக ரங்கசாமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

இதே நிலை நீடித்தால் புதுச்சேரிக்கு நல்ல விடிவு காலம் வரும். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் தொடர்பாக முதல் அமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புக்கு அனுமதி கொடுக்காமல் கவர்னர் கைலாஷ்நாதன் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக கவர்னர் கைலாஷ்நாதன் நடந்து கொள்வதைதான் இது காட்டுகிறது. மேலும், நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு செய்வதையும் இது வெளிப்படுத்துகிறது.

ஆனால் நிர்வாகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் முடங்கியுள்ளன. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஊழல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதுபோன்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சொல்வதற்குத் தயாரா? முதல்-அமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தில் கவனத்தில் செலுத்தாமல் வழக்கம்போல தனிப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கம், ரெயில் திட்டங்கள், சாலை திட்டங்கள் குறித்து புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த வாரம் நடந்த அரசு விழாவில் சொல்லியுள்ளார். இதெல்லாம் அரசின் கொள்கை முடிவுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் அமைச்சர்தான் இதைச் சொல்ல வேண்டும்.

புதுச்சேரியில் இது போன்ற நிலைதான் கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோது நீடித்தது. அதனால்தான் அவருக்கு எதிராக அப்போது முதல்-அமைச்சராக இருந்த நான் உள்ளிட்டோர் போராடினோம்.

உச்சநீதிமன்றம் தலையீடு காரணமாக நீட் மறுதேர்வு தற்போது நடந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை காரணமாக நாட்டில் கல்வித்தரம் குறைந்து வருகிறது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தி திணிப்பை அமல்படுத்துகின்றனர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது ஏன் என்ற கேள்விக்கு, நான் ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. உண்மையைச் சொல்கிறேன். அவருடைய ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது என்று தான் சொல்லியுள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.