புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை வழக்கு
புதுச்சேரி

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை அதிபரின் ரகசிய டைரியில் போலீஸ் உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியல்: சி.பி.ஐ. விசாரணையால் உள்ளூர் போலீசார் கலக்கம்

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை அதிபரின் ரகசிய டைரியில் போலீஸ் உயர் அதிகாரிகளின் பெயர் இடம் பிடித்துள்ளதால் கலக்கம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் பெரும் புயலை கிளப்பிய போலி மருந்து விவகாரத்தில் போலி மருந்து ெதாழிற்சாலை அதிபர் ராஜா உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ.க்கு மாற்றம்

போலி மருந்து தொழிற்சாலை, குடோன்கள் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து புயல் சற்று ஓய்ந்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ.யின் தொடர் விசாரணையில் போலி மருந்து விவகாரத்தில் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும், இதுதொடர்பாக ராஜாவிடம் கைப்பற்ற பற்றப்பட்ட ரகசிய டைரியில் 18 போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் சி.பி.ஐ.,யில் சிக்கியுள்ளது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் தவித்து கொண்டுள்ளனர்.

போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம்

இந்நிலையில் போலி மருந்து வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ராஜா, சி.பி.ஐ., வழக்கை செயலிழக்க வைக்க டெல்லி போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், ராஜா லஞ்சப்பணத்தை சென்னையை சேர்ந்த 'ஹவாலா' ஏஜென்ட் மூலம் அனுப்பியதும், அந்த ஹவாலா ஏஜென்டிற்கு புதுச்சேரியில் இருந்து பணத்தை கொண்டு செல்ல அரசியல் பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில் உள்ளூர் போலீசார் இருவர் புதுச்சேரி மாநில எல்லை வரை வழிக்காவல் சென்று வழியனுப்பியது உறுதியானது.

அதிரடி மாற்றம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹவாலா பணத்திற்கு வழிக்காவல் சென்ற விவகாரத்தில் தொடர்புடைய எஸ்.ஐ., மற்றும் ஒரு போலீஸ்காரரிடம் துறை ரீதியான விசாரணை தொடங்கி உள்ளது. அதன் முதல்கட்டமாக இருவரும், அதிரடியாக மாகி பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி மாற்றல் நடவடிக்கையால், போலி மருந்து வழக்கில் கைதான ராஜாவிடம் பறிமுதல் செய்த டைரியில் உள்ள போலீஸ் அதிகாரிகள், அடுத்து நமக்கு என்ன நடக்குமோ என கலக்கத்தில் உள்ளனர்.