புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்து வருவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், தென் மாவட்டங்களில் மிககனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதுமட்டுமல்லாமல், வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், இன்று, நாளை மற்றும் 24-ந்தேதிகளில் மிதமான மழைக்கும், 25-ந்தேதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும்,
திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கனமழையும், ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதே போல், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்து வருவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.