காரைக்காலில் மறைத்து வைத்திருந்த 5 சிலைகளை மீட்ட போலீசார் 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் தர்மபுரம் கீழத்தெரு பகுதியில் ஒருவர் கோவில் சிலைகளை வைத்திருப்பதாக காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவு செல்வனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் போலீசாருடன் சென்று தர்மபுரம் கீழத்தெருவை சேர்ந்த அபிராமசுந்தரம் என்ற அபிராம் (44), நாகப்பட்டினம் கீழ்வேளூர் ரயிலடி தெரு ஷாஜகான்(46) ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்தபோது அவர்கள் வீட்டில் 5 சிலைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
சட்டபூர்வமாக சிலைகளை வைத்திருக்க எந்தவிதமான உரிய ஆவணமோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை. இதனால் அவை திருடப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த 5 சிலைகளை மீட்டு 2 பேரையும் கைது செய்து, கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மீட்கப்பட்ட 5 சிலைகளில் 4 சிலைகள் தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகிலுள்ள இலுவப்பட்டு கிராமத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட பழமையான சிலைகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையும், காரைக்கால் காவல்துறையும் இணைந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சிலை எங்கிருந்து திருடப்பட்டது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.