வேலூர்:
போலியோ எனப்படும் இளம்பிள்ளை நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் கட்டமாக வழங்கபட்டது. நாளை 11-ந் தேதி 2-வது கட்டமாக அனைத்து இடங்களிலும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இப்பணியினை சிறப்பாக செயல்படுத்த 2,291 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளிலும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலை பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்குகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக இடம் பெயர்ந்து நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியில் பொது சுகாதார துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, வருவாய்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்பட முகாம் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. #Tamilnews