பள்ளி 
செய்திகள்

வால்பாறையில் மேலும் ஒரு அரசு பள்ளி மூடப்படுகிறது

மாணவர்கள் யாரும் இல்லாததால் கோவை மாவட்டம் வால்பாறையில் மேலும் ஒரு அரசு பள்ளி மூடப்படுகிறது

மாலை மலர்

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு நலப்பள்ளி, உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என 86 பள்ளிகள் உள்ளது.

இது தவிர 3 அரசு உயர்நிலை பள்ளி, 4 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. வால்பாறையில் வனவிலங்கு - மனித மோதல் மற்றும் குறைவான சம்பளம் போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்கள் மாற்று இடம் தேடி செல்கின்றனர்.

இதனால் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

வால்பாறை மலைப்பகுதியில் இந்த கல்வியாண்டில் 25-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட சின்னக் கல்லார் அரசு நலப்பள்ளி இந்த கல்வி ஆண்டில் ஒரு மாணவருக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையே போதிய மாணவர்கள் இல்லாததால் 2018-ம் ஆண்டு முடீஸ் அரசு மேல்நிலைப் பள்ளி மூடப்பட்டது.

1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) பெரிய கல்லார் ஐந்தாம் டிவி‌ஷன் (டாப்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

சில ஆண்டுகளாக இங்கு வசித்த தொழிலாளர்கள் வேறுபகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் மாணவர்கள் சேர்க்கை சரிய தொடங்கியது.

இந்த எஸ்டேட்டில் தற்போது 20 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 2 மாணவர்கள் படித்தனர். இந்த கல்வியாண்டில் அவர்களும் வேறு பள்ளியில் சேர்ந்ததால் மாணவர்கள் இன்றி பள்ளி செயல்பட்டு வருகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர் தேனரசன் மட்டும் தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார். மாணவர்கள் இல்லாததால் இப்பள்ளியை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து கூறியதாவது-

சின்கோனா பெரிய கல்லார் ஐந்தாம் டிவி‌ஷன் (டாப்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாததால் பள்ளியை மூட மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அரசிடம் இருந்து முறையாக உத்தரவு வந்த பின் தொடக்கப்பள்ளி மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.