பாட்னா:
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தார்.
சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இரு கட்சிகளையும் சேர்ந்த 29 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். புதிய மந்திரிகள் பற்றி ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.
தேர்தல் கமிஷனில் அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் அடிப்படையில் மந்திரிகளின் சொத்துப்பட்டியல், குற்றப்பின்னணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
76 சதவீத மந்திரிகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள். அதன்படி மொத்தம் உள்ள 29 மந்திரிகளில் 22 பேர் மீது கொலை, கொலை முயற்சி,கொள்ளை, திருட்டு, மோசடி, பெண்களுக்கு எதிரான கொடுமை போன்ற குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளது.
72 சதவீத மந்திரிகள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். பா.ஜனதா மந்திரி விஜய்குமார் சின்காவின் சொத்து ரூ. 15 கோடி, மற்றொருவரான சுரேஷ்குமாரின் சொத்து ரூ. 11 கோடி,. ஐக்கிய ஜனதா தளம் மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங்கின் சொத்து ரூ. 5 கோடி.
மிகக் குறைந்த அளவாக பா.ஜனதா மந்திரிகள் மங்கள் பாண்டே, பிரிஜ் கிஷோர் பிந்த், பினோத்குமார் சிங் ஆகியோரின் சொத்து முறையே ரூ. 49 லட்சம், ரூ. 52 லட்சம், ரூ. 67 லட்சம்.
9 மந்திரிகள் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளனர். இதுபற்றி பாட்னாவில் முன்னாள் துணை முதல்- மந்திரியும் லல்லு பிரசாத் மகனுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ் குமார் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் மீது குற்றப் பின்னணி இருப்பது அதிசயம் தான் என்று கிண்டல் செய்தார்.