மகாராஷ்டிராவில் சிவசேனா, உத்தவ் சிவசேனா, ஷிண்டே சிவசேனா 2022 முதல் பிளவுபட்டு உள்ளது. ஷிண்டே சிவசேனா பாஜக கூட்டணியிலும், உத்தவ் சிவசேனா இந்தியா கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த எம்.பி நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர், ஆளும் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவரும் மற்ற சில உத்தவ் சிவசேனா அதிருப்தி எம்பிகளுக்கும் விரைவில் ஷிண்டே பக்கம் செல்ல உள்ளதாக கடந்த சில வாரமாக கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே, டெல்லி சென்று தங்கள் அணி எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார்.
உத்தவ் அணிக்கு மொத்தம் 9 எம்.பிக்கள் உள்ளனர். அவர்களில் 6 பேர் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த சூழலில் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் அணி மாறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"நானும் உத்தவ் சிவசேனாவின் வேறு சில எம்பிக்களும் கடந்த ஜூன் 18 வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆனால், கடந்த வியாழக்கிழமை முதல் எங்களுக்கு எதிராகக் கட்சியில் ஆபாசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
அதன் பிறகே, இங்கு நீடிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அணி தலைவர் உத்தவ் தாக்கரே அல்லது மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது தனக்கு தனிப்பட்ட கோபமில்லை என்று நாகேஷ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருப்பதால் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்காமால் தனது ஹின்கோலி தொகுதி மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் வேறு எந்த எம்பிக்கள் செல்ல உள்ளனர் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.