ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகை காரணமாக பெண்கள், குழநதைகள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி மத்திய அரசை கார்கே சாடியுள்ளார்
நாட்டில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகை குறித்த அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"மோடி அரசாங்கத்தின் சொந்த அறிக்கையான 'ICMR-SAMPADA' பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களில் 55.9% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளரிளம் பருவத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளில் மூன்றில் இரு பங்கினருக்கு வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது.
1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில், இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் 66% பேரும், சிறு குழந்தைகளில் 57% பேரும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'லேசான' இரத்த சோகை குறித்து மோடி அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதால், குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களில் சுமார் 30% பேர் 'மிதமான' அல்லது 'தீவிரமான' இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை மறைத்துவிட முடியாது.
சமீபத்திய NFHS-6 தரவுகளின்படி, நம் நாட்டு குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் போதிய உடல் எடையின்றி இருப்பதும், ஐந்தில் ஒரு பங்கு பேர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
'சக்ஷம் அங்கன்வாடி', 'போஷன் 2.0' மற்றும் அதற்கு முந்தைய திட்டங்களின் கீழ், கடந்த ஆறு நிதியாண்டுகளில் ரூ.1.13 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
'போஷன் 2.0' திட்டத்தின் கீழ், வெறும் நான்கு ஆண்டுகளில் விடுவிக்கப்பட்ட நிதிக்கும் செலவிடப்பட்ட நிதிக்கும் இடையே ரூ.2,500 கோடிக்கும் அதிகமான இடைவெளி உள்ளது.
தொடக்கக்கால 'போஷன் அபியான்' திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட நிதியில் சுமார் 44% பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் 'பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கான' ஒதுக்கீடு, 2015-16-ல் 0.96%-ஆக இருந்த நிலையில், 2025-26-ல் அது பாதியாகக் குறைந்து 0.50%-ஆக மாறியுள்ளது.
மோடி அரசாங்கம் பதவியில் இருந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், பல ஊட்டச்சத்துத் திட்டங்கள், செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் இரும்புச்சத்து வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும், அவை நடைமுறையில் பலனளித்தனவா என்பதற்கான இதற்கான பொறுப்புக்கூறல் எங்கே போனது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.