அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் 'விஐபி' யார் என்பது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், துஷ்யந்த் குமார் கௌதம் சிக்கிமின் 19வது ஆளுநராகப் பதவியேற்றார்.
சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. முகமது முஷ்டாக், துஷ்யந்த் குமார் கௌதமுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், அமைச்சர்கள், சபாநாயகர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சிக்கிம் ஆயுதக் காவல் படையினர் ஆளுநருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதையை வழங்கினர்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அக்டோபர் 12 அன்று துஷ்யந்த் குமார் கௌதமை சிக்கிம் ஆளுநராக நியமித்தார். இவர் ஓம் பிரகாஷ் மாத்தூருக்குப் பிறகு இந்தப் பதவியை ஏற்கிறார்.
68 வயதான துஷ்யந்த் கவுதம் முன்னதாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், SC பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள விடுதியில் வரவேற்பாளராக இருந்த அங்கிதா பண்டாரி என்பவரின் சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலை குற்றச்சாட்டில் துஷ்யந்த் கவுதம் பெயர அடிபட்டது.
அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், செல்வாக்கு மிக்க 'விஐபி' நபரின் பங்கு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
விசாரணை முடியும் வரை கௌதமின் நியமனத்தை ஒத்திவைக்க வேண்டும் என டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் அங்கிதா பண்டாரியின் பெற்றோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிதா பண்டாரி கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ வழக்கு முடியும் வரை துஷ்யந்த் குமார் கவுதமின் ஆளுநர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார். அவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவில் அங்கிதாவின் பெற்றோர் இந்தியா கேட்டில் இருந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே கௌதமின் நியமனத்தை கண்டித்து, கடந்த வாரம் கேங்டாக்கில் உள்ள மாவட்ட நிர்வாக தலைமையகம் அருகே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
வழக்கு மீதான விசாரணை முடிவடைவதற்கு முன்பே கௌதம் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் ஆளுநராகப் பதவியேற்றார்.