இந்தியா

கடித்த பாம்பை பிடித்து டப்பாவுக்குள் அடைத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்த பெண்

பாம்பை பார்த்து விஷத்தன்மைக்கு ஏற்ப டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சையை தொடங்கினார்கள். கடித்த பாம்புடன் அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததை அறிந்ததும் பலர் அங்கு கூடி விட்டார்கள்.

என்னய கடிச்சுபுட்டு ஓட பார்க்குறியா...? விட்டுருவேனா... என்று தன்னை கடித்த பாம்பை விரட்டிய அந்த பெண்ணை பார்த்து தான் அந்த பாம்பு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியது. ஆனால் அந்த பெண்ணும் விடவில்லை. துரத்தி சென்று பிடித்து விட்டார்.

பிடிபட்ட பாம்பை கையில் கிடைத்த ஒரு பிஸ்கட் டப்பாவுக்குள் போட்டு இறுக மூடி கையில் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

ஆஸ்பத்திரிக்கு சென்றதும் டாக்டர் என்னை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னவரிடம், ‘என்ன பாம்பும்மா... என்று டாக்டர் விசாரிக்க தொடங்கியதும் ‘அதற்கெல்லாம் உங்களுக்கு வேலையே இல்லை சார்... இதோ இதுதான் என்னை கடித்த பாம்பு என்று பைக்குள் வைத்திருந்த பிஸ்கட் டப்பாவை எடுத்து காட்டியதும் சுருண்டு கிடந்தாலும் சீற்றத்துடன் சீறிய பாம்பை பார்த்ததும் டாக்டர்களும், நர்சுகளும் அலறாத குறையாக பயத்தில் நடுங்கினார்கள்.

பாம்பை பார்த்து விஷத்தன்மைக்கு ஏற்ப டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சையை தொடங்கினார்கள். கடித்த பாம்புடன் அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்கு வந்ததை அறிந்ததும் பலர் அங்கு கூடி விட்டார்கள்.

ஒடிசா மாநிலம் மலகங்கிரி மாவட்டம் குரும்பாலி கிராமத்தை சேர்ந்தவர் மணி மாநயக். வழக்கம் போல் நேற்று இரவு தூங்க சென்றார். படுத்த சிறிது நேரத்தில் காலில் ஏதோ ‘நறுக்’ என்று கடித்தது போல் இருந்தது. கடுமையான வலியும் இருந்ததால் திடுக்கிட்டு எழுந்த மணிமா, தன்னை பாம்பு தான் கடித்து இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். அதற்காக பதட்டப்படாமல் அந்த பாம்பை தேடினார். பாம்பு அங்கிருந்த பண்ட பாத்திரங்களுக்கு இடையே ஓடியது. அவரும் விடாமல் பாம்பை துரத்தி சென்று பிடித்து இருக்கிறார். உடனே குடும்பத்தினர் மணிமாவை ஆம்புலன்ஸ் மூலம் மதிலியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

பொதுவாக இந்த மாதிரி சூழலில் பயம் தான் அதிகமாக இருக்கும். சிலர் பாம்பை அடித்துக் கொள்வார்கள். ஆனால் மணிமா அந்த விஷப்பாம்பை பிடித்து எடுத்து வந்தது பாம்பின் வகையை டாக்டர்கள் துல்லியமாக அடையாளம் கண்டு மிகவும் பொருத்தமான சிகிச்சை அளிக்கவும், விஷமுறிவு மருந்தை வழங்கவும் உதவியாக இருந்துள்ளது.

பெண்ணின் புத்தி பின் போன்றது (கூர்மையானது) என்பதை நிரூபித்த மணிமாவின் துணிச்சலை டாக்டர்கள் பாராட்டினார்கள். பாம்பு கடித்தவுடன் அவர் செயல்பட்ட விதம் மருத்துவர்கள் அந்த பாம்பினத்தை அடையாளம் காண உதவியது மட்டும் இன்றி பதற்றமடையாமல் அமைதி காப்பது மற்றும் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது என்று டாக்டர்கள் கூறினார்கள்.