இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 'ஜூலை 1-ஆம் தேதி' மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் மகத்தான சேவையைப் போற்றும் வகையில் 'தேசிய மருத்துவர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினம், இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த அரசியல் தலைவரான 'டாக்டர் பிதான் சந்திர ராயின்' நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
படிப்பில் சிறந்த விளங்கிய பிதான் சந்திர ராய், கணிதத்தில் பட்டம் பெற்ற பின் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தார். 1909-இல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் பர்த்தலோமியூ மருத்துவமனையில் உயர்கல்வி கற்க விண்ணப்பித்தார். ஆனால், அவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும், மனம் தளராமல் 30-க்கும் மேற்பட்ட முறை விண்ணப்பித்து இறுதியில் அனுமதி பெற்றார். அடுத்த இரண்டே ஆண்டுகளில், மருத்துவ உலகின் மிக உயரிய தகுதிகளான MRCP மற்றும் FRCS ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பெற்று சாதனை படைத்தார்.
இந்தியா திரும்பிய அவர், நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். பெண்களுக்கான 'சித்தரஞ்சன் சேவா சதன்' உட்பட காசநோய், புற்றுநோய் மற்றும் மனநலப் பாதுகாப்புக்கான பல முன்னணி மருத்துவமனைகளை உருவாக்க அடித்தளம் அமைத்தார்.
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராகவும், அவரது தனிப்பட்ட மருத்துவராகவும் இருந்த டாக்டர் ராய், சுதந்திரப் போராட்டத்திற்காக சிறைத்தண்டனையும் அனுபவித்தார். விடுதலைக்குப் பிறகு, காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று 1948-இல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பிரிவினைக்குப் பிந்தைய வன்முறை, அகதிகள் குடியேற்றம் மற்றும் வறுமையால் தவித்த அம்மாநிலத்தை 14 ஆண்டுகள் திறம்பட வழிநடத்தி, துர்காபூர், கல்யாணி, சால்ட் லேக் போன்ற நவீன நகரங்களை உருவாக்கி, "நவீன மேற்கு வங்கத்தின் சிற்பி" என்று போற்றப்பட்டார்.
நாட்டின் நலனுக்காகவும் மருத்துவத் துறைக்காகவும் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டி, 1961-ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய பொதுத்துறை விருதான 'பாரத ரத்னா' வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரது நினைவாக, மருத்துவத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் 'பி.சி. ராய் தேசிய விருது' வழங்கப்பட்டு வருகிறது.