மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹல்சிஹாஹர் என்ற ஊரில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பிர்ஜு கியோட் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழியரின் குடும்பத்தினரை மம்தா இன்று சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தகவலின்படி, மம்தா வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய சிலர், அவரின் கான்வாய் காரை மறித்துள்ளனர். காரின் மீது சேற்றை வாரி இறைத்தும், கற்கள், தண்ணீர் பாட்டில்கள், காலணிகளை வீசியும் தாக்கியுள்ளனர்.
மேலும் மம்தாவை வசைபாடி கோஷமிட்ட கும்பல், அவரை, திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
திரிணாமுல் கட்சி ஊழியர் பிர்ஜு கியோட், முறைகேடு, பணம் பறிப்பு ஆகிய குற்றசாட்டுகளில் கைதாகி கஸ்டடியில் இருந்தார்.
அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தபோதும் கஸ்டடியில் போலீசாரால் தாக்கப்பட்டு பிர்ஜு கியோட் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த சூழலில்தான் மம்தா இன்று ஹாலிஸ்ஹாஹருக்கு, உயிரிழந்த தொண்டரின் குடும்பத்தை சந்திக்க வருகை தந்துள்ளார்.
ஆனால் தொண்டரின் வீட்டை அடையும் முன் கும்பலால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து மம்தாவை பத்திரமாக அவ்விடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ள மம்தா, " போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட கட்சித் தொண்டரை சந்திக்க சென்றபோது என் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரு வேளை கார் கண்ணாடி திறந்திருந்தால், என் தலையே பிளந்திருக்கும். காவல்துறையினர் கண் முன்னே இது நடந்தது. அவர்கள் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். பாஜகவினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர்" என தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா, தங்கள் கட்சித் தொண்டர்கள் இதில் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார். பாஜக கல்வீச்சு, சேறு, செருப்பு வீச்சை ஊக்குவிக்காது என்றும் அது மேற்கு வங்கத்தின் இமேஜுக்கு களங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக பெயரை சொல்லி அப்படி யாராவது செய்திருந்தால் அது தவறு என்று தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் ஆட்சி காலத்தின்தான் அரசியல் எதிரிகள் மீது அரசு ஆதரவுடன் இதுபோன்ற சேறு, மை, செருப்பு வீச்சுகள் அரங்கேறியதாக அவர் விமர்சித்தார்.