மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி பிரிவு உருவாகி உள்ளது.
அக்கட்சிக்கு மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் 60 பேர் அதிருப்தி பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களே எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கைப்பற்றினர்.
திரிணாமுல் காங்கிரசுக்கு சொந்தம் கொண்டாடும் இந்த பிரிவு நேற்று கட்சியின் தலைவர் மம்தாவை அப்பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது.
அவருக்குப் பதிலாகத் தங்களது புதிய தலைவராக எம்.எல்.ஏ அரூப் ராயை கிளர்ச்சி தரப்பு தேர்வு செய்தது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிறுவிய மம்தாவே கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிருப்தி குழு தங்களை உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறித் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டிருந்தது.
ஆனால் மம்தா பானர்ஜி தரப்பு முந்திக்கொண்டு அதிருப்தி அணியில் இருப்போரை நீக்கிவிட்டு கட்சியின் புதிய நிர்வாகிகள் குழுவின் பட்டியலை இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.
மம்தா தரப்பு சமர்ப்பித்துள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில் கட்சித் தலைவராக மம்தா பானர்ஜி, துணைத் தலைவராக சுப்ரதா பக்ஷி, தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மக்களவை குழுத் தலைவராக மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
டெரெக் ஓ பிரையன் மற்றும் டோலா சென் இணைச் செயலாளர்களாகவும், பொருளாளராக சுபாஷிஷ் சக்ரவர்த்தியும் பெயரிடப்படுள்ளனர்.
கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் மட்டக் குழுவில் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் சேர்த்து மொத்தம் 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இது, மம்தா தான் கட்சியின் தலைவர் என்பதை முன்னிறுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.