மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூன்று வங்கி கணக்குகளில் இருந்த ரூ.440 கோடி பணத்தை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின் கட்சி இரண்டாக உடைந்து இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் கட்சி நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக அதிருப்தி அணி அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் வட்டாரங்களின்படி, கொல்கத்தாவைச் சேர்ந்த கேர்வெல் ஏவியேஷன் நிறுவனம் மூலம் திரிணாமுல் காங்கிரசின் நிதியைப் பயன்படுத்தி ரூ.112 கோடி மதிப்பில் Embraer 600 ரக சொகுசு விமானம் மற்றும் Agusta ரக ஹெலிகாப்டர் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கட்சியின் பொது நிதியில் இருந்து வாங்கப்பட்ட போதிலும், அவை கேர்வெல் ஏவியேஷன் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர், அதே விமானமும் ஹெலிகாப்டரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே வாடகைக்கு விடப்பட்டுள்ளது போல் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் மட்டுமே இந்த சொகுசு வாகனங்களை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் விமானப் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் வாடகை என்ற பெயரில் கட்சியின் பொது நிதி மீண்டும் அந்த விமான நிறுவனத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்கள் மூலம் கட்சியின் பணம் தலைவர்களின் தனிப்பட்ட சொத்துகளாக மாற்றப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி மற்றும் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாகி தனித்து செயல்படுகின்றனர்.
அதிக எம்எல்ஏக்கள் உள்ளதால் அவர்களுக்கே எதிர்க்கட்சி அந்தஸ்தை அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் வழங்கியுள்ளார். அதிருப்தியாளர்களின் தலைவர் ரிதர்பா எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துடன் உள்ளார்.
இதனிடையே இவர்கள் திரிணாமுல் காங்கிரசை அதை உருவாக்கி சக்திவாய்ந்த கட்சியாக கட்டியெழுப்பிய மம்தா பானர்ஜியிடம் இருந்து முழுமையாக பிடுங்கிக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது மறைமுகமாக பாஜக செய்யும் சதி என சாடும் மம்தா, தைரியம் இருந்தால் அதிருப்தியாளர்கள் பாஜகவில் சேர்ந்து தன்னை நேரடியாக எதிர்க்க வேண்டும் என சவால் விடுத்தார்.
ஆனால் அதை காதில் வாங்காத அதிருப்தியாளர்கள் திரிணாமுல் காங்கிரசை வளைத்துப்போடும் தீவிரத்தில் முதலில் கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர்.
கட்சியின் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கட்சியின் தலைவர், நிர்வாகிகளை உள்ளடக்கிய அமைப்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அவர்கள் வாதிட்டுருந்தனர்.
இதை பாஜகவின் கைக்கூலி என மம்தாவால் விமர்சிக்கப்படும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
கட்சி தங்களுக்கே சொந்தம் என மம்தா தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கட்சியின் தற்போதைய தலைவர், நிர்வாகிகளை உள்ளடக்கிய அமைப்பு முழுமையாக செல்லுபடியாகும் என்றும் அது 2027 வரை தொடரும் என்றும் மம்தா தரப்பு கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பதிலில், திரிணாமூல் காங்கிரஸ், கட்சியின் அரசியலமைப்பின்படி அமைப்பு குழுக்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று கூறியுள்ளது.
கட்சியின் கூற்றுப்படி, 2022ல் நடைபெறும் அமைப்புத் தேர்தல்களுக்குப் பிறகு, தற்போதைய குழுவின் பதவிக்காலம் 2027 வரை அமலில் இருக்கும்.
கிளர்ச்சி தரப்பின் கூற்று உண்மையாக இருந்தால், கட்சியின் தேர்தல் சின்னத்தையும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களையும் பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் எவ்வாறு போட்டியிட்டார்கள் என்று மம்தா தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கேள்வி எழுப்பியது.