மம்தா  
இந்தியா

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - மம்தா மெழுகுவர்த்தி பேரணி

4 பேரில் ஒருவனை அடித்துக்கொன்றனர்.

மேற்கு வங்கத்தில் 12 வயது சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொலை

தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பருய்பூரில் உள்ள சுர்ஜ்யாபூரை சேர்ந்த சிறுமி தோழியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் காணாமல் போனாள்.

சிறுமியை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமியை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி குளத்திற்கு அருகே வீசியுள்ளனர்.

கடைக்கு சென்ற சிறுமி திரும்பி வராததால் ஊர் முழுவதும் தேடிய பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போராட்டம்

சிறுமியை பின்தொடர்ந்த 4 பேரில் ஒருவனை கண்டுபிடித்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக அவன் கூறிய நிலையில் அவனை அங்கேயே அடித்துக்கொன்றனர்.

தொடர்நது அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திக்க முயற்சி

முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்திக்க முடிவு செய்திருந்தார்.

ஆனால், நேற்று மாலைக்குள், கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள மம்தாவின் இல்லத்திற்கு வெளியே ஒரு பெரிய போலீஸ் படை குவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க விடாமல் தன்னை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இதனிடையே சிறுமியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மெழுகுவர்த்தி பேரணி

இந்நிலையில் இன்று மாலை கொல்கத்தாவில் தனது இல்லம் அமைந்துள்ள ஹரிஷ் சாட்டர்ஜி தெரு அருகே மம்தாவும் திரிணாமுல் காங்கிரசாரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிகள் டோலா சென், பிரதிமா மொண்டல் ஆகியோர் உடன் இருந்தனர். பதாகைகளையும் மெழுகுவர்த்தியையும் ஏந்தியவாறு அவர்கள் பேரணியாக சென்றனர்.

ஆட்சி மாறியும் மாறாத காட்சி

கடந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு அப்போது ஆட்சியில் இருந்த மம்தா அரசு மீது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

பெண்கள் மீதான குற்றங்களை தடுக்கத் தவறியதாக மம்தா அரசை சாடி பாஜக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. கொல்லப்பட்ட பெண் பயிற்சி தாயார் பாஜக சார்பில் போட்டியிட்டு முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ ஆனார்.

பாஜக ஆட்சியை சுவேந்து அதிகாரி முதல்வர் ஆன நிலையில் தற்போது நடந்துள்ள வன்கொடுமை கொலை சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சிறப்பு அதிரடிப் படையின் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.