உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடுகளைத் தடுப்பதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பழைய விதிகளே தொடரும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும், யுஜிசியும் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்தத் தகவலைத் தெரிவித்தார். மாணவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், எந்தவொரு பிரிவினரும் அதிருப்தியோ அல்லது அச்சமோ அடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருகிறது.
எனவே, இந்த விதிகளை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது" என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்
கடந்த ஜனவரி 2026-ல் அறிவிக்கப்பட்ட 'யுஜிசி உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் விதிமுறைகள் 2026-க்கு எதிராகப் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த புதிய விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களைப் பாகுபாடுகளுக்கு எதிரான புகார் அளிக்கும் கட்டமைப்பிலிருந்து விலக்கி வைப்பதாகவும், தெளிவற்றதாக இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றம் இதற்கு கடந்த ஜனவரியிலேயே இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பினதங்கிய மாணவர்களுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், பாகுபாடு குறித்த புகார்களை விசாரிப்பதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சமவாய்ப்பு மையங்கள், சமத்துச்வ குழுக்களையும் நிறுவ வேண்டும் என இந்த விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.
பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவுகளைச் சாராதவர்களுக்குக் குறைதீர்ப்பு மற்றும் நிறுவனப் பாதுகாப்பை மறுப்பதால், இந்த விதிமுறைகள் பாகுபாடு காட்டுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது மத்திய அரசு விதிமுறைகளைத் திருத்துவது குறித்துக் குழு அமைக்கப் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.