பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 137-வது பதிப்பில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் புதுமையான முயற்சிகள் மற்றும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவரின் சாதனையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
இதுகுறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
என் அன்பு நாட்டு மக்களே, தற்போது இந்திய நகரங்களில் அவகோடா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்த பழத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது, அதற்கான தேவையும் சந்தை மதிப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று, ஆரோக்கியம் மற்றும் பிரீமியம் சந்தைகளில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதோடு, பலரது உணவு மேஜைகளிலும் தவறாமல் இடம் பெறத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், இந்த புதிய பயிர் வாய்ப்பைப் பயன்படுத்தி தென்னிந்திய விவசாயிகள் எப்படித் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார்.
"தமிழ்நாடு, கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் அவர்கள் தனது அரை ஹெக்டேர் நிலத்தில் அவகோடா பழங்களைப் பயிரிடத் தொடங்கினார்.
தற்போதைய சந்தையில் இப்பழங்களுக்குக் கிடைக்கும் நல்ல விலையின் காரணமாக, அவருக்குப் பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளதுடன், அவரது வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளின் உழைப்பையும் பிரதமர் பாராட்டிப் பேசினார்.
ஆந்திர பிரதேசம் கடப்பாவைச் சேர்ந்த வரதராஜ் என்ற விவசாயி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 4 டன் அவகோடா பழங்களை உற்பத்தி செய்து, இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு விற்று நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது காபித் தோட்டங்களுக்கு நடுவே அவகோடா மரங்களை ஊடுபயிராக நட்டு, காபி மற்றும் மிளகுடன் சேர்த்து உபரி வருமானமும் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர் மேலும் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கூறினார்.
"நகரத்து உணவகங்களில் அவகோடா டோஸ்ட் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், இதே அவகோடா மூலம் நமது நாட்டின் புதுமைப்பித்த விவசாயிகளும் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.
சுருக்கமாகச் சொன்னால், நமது நாட்டின் மண்ணில் விளைந்த அவகோடா, வாடிக்கையாளர்களின் உணவைச் சுவையாக்குவதோடு, மறுபுறம் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளது" எனப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.