சமூக வலைதளங்களில் கடைக்குள் நுழைந்து கடை உரிமையாளரை ஒரு குரங்கு அன்போடு கட்டிப்பிடிக்கும் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. கட்டிப்பிடி வைத்தியம் என நெட்டிசன்களால் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த கடை உரிமையாளரை நோக்கி மெதுவாகச் சென்றது. பொதுவாகக் குரங்குகள் கடைகளுக்குள் நுழைந்தால் பொருட்களைப் பறிப்பது அல்லது உணவைத் தேடுவது வழக்கம். ஆனால், இந்த காணொளியில் குரங்கு எந்த ஒரு சேட்டையும் செய்யாமல், நேராக உரிமையாளரின் மடியில் ஏறி அவரை மிகவும் அன்போடு இரு கைகளாலும் கட்டிப்பிடித்துக் கொண்டது.
குரங்கு தன்னை கட்டிப்பிடித்த போது, அந்த கடைக்காரரும் எவ்வித பயமும் இன்றி மிகவும் அமைதியாக எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார்.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அழகான பிணைப்பை உணர்த்துவதாக நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் எந்த பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றது பற்றி எந்த தகவலும் இல்லை.