கோப்புப் படம்  
இந்தியா

வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள விமான நிலையத்தில் சோதனையின்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கியுடன் பயணி வருகை

இன்று, காலை சுமார் 9.30 மணியளவில் உத்திரப் பிரதேச மாநிலம் ஆசம்காரை சேர்ந்த ஒரு பயணி, தனது மனைவியுடன் வாரணாசியில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.

அவர் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மேகசினை உடன் எடுத்து வந்திருந்தார்.

விமானத்தில் ஏறுவதற்கு முன் பாதுகாப்பு விதிகளின்படி அவரிடம் துப்பாக்கி இருப்பதை அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்தார்.

சோதனை

வாரணாசி விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்த தகவலின்படி, பயணியின் துப்பாக்கி மற்றும் அதற்கான உரிம ஆவணங்களை விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது.

துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா முதலில் தரையில் பட்டு, பின்னர் அங்கிருந்த இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.

காயம்

தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரின் தொடையிலும், ஆண் ஊழியர் ஒருவரின் கையிலும் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டது.

காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, துப்பாக்கி வெடித்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT