இந்தியா

தயிரில் நெளிந்த புழுக்கள்.. வந்தே பாரத் பயணிக்கு வந்த சோதனை - IRCTC-க்கு ரூ.10 லட்சம் அபராதம்

இந்த மென்மையான நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த ரெயில்வே அமைச்சகம் அபராதத் தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து உயர்த்தியது.

கடந்த மார்ச் 15 அன்று பாட்னா - டாடாநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரித்தேஷ் சிங் என்ற பயணி உட்பட ஏழு பேர் கொண்ட குழுவிற்கு மதிய உணவோடு ஒரு பிரபல நிறுவனத்தின் தயிர் பாக்கெட் வழங்கப்பட்டது.

பாக்கெட்டைத் திறந்தபோது அதில் உயிருள்ள புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரித்தேஷ் சிங், உடனடியாக அதனை வீடியோ எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்தார்.

அந்தத் தயிர் பாக்கெட் மார்ச் 9, 2026 அன்று தயாரிக்கப்பட்டதாகவும், ஏப்ரல் 7, 2026 வரை காலாவதி தேதி இருந்ததாகவும் IRCTC விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் ஐஆர்சிடிசி நிறுவனம் 'கிருஷ்ணா என்டர்பிரைசஸ்' என்ற அந்த விநியோக நிறுவனத்திற்கு வெறும் ரூ.25,000 அபராதம் விதித்திருந்தது.

ஆனால், இந்த மென்மையான நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த ரெயில்வே அமைச்சகம், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, அபராதத் தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி அதிரடி உத்தரவிட்டது.

சரியான முறையில் உணவின் தரத்தைக் கண்காணிக்கத் தவறியதற்காக, ரயில்வே அமைச்சகம் தனது சொந்த நிறுவனமான ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.