இந்தியா

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் இனி 70 வயது வரை பணியாற்றலாம் – மாநில அரசின் புதிய முடிவு!

மூத்த மருத்துவர்கள் அனுபவம் ஏழைகளுக்கு கிடைக்க புதிய அரசாணை - அமைச்சர் பிரஜேஷ் பதக்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் 70 வயது வரை பணியாற்றும் வகையில் மறு நியமனம் செய்ய அம்மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாளுவதற்கும், தகுதியான நிபுணத்துவ மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

65-லிருந்து 70 ஆக உயர்வு

தற்போது நடைமுறையில், உத்தர பிரதேச அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. புதிய திட்டத்தின்படி, 65 வயதை எட்டி ஓய்வு பெறும் தகுதியான மருத்துவர்கள், தங்களின் விருப்பத்தின் பேரில் மறு நியமனம் மூலம் 70 வயது வரை தங்களது சேவையைத் தொடரலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆணை பிறப்பிக்கும் பணிகள் தீவிரம்

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில சுகாதார அமைச்சரும், துணை முதல்வருமான பிரஜேஷ் பதக் கூறுகையில், "மாநிலத்தின் அரசு சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மூத்த மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் மருத்துவ அனுபவத்தை ஏழை எளிய நோயாளிகளுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை வெளியிடும் பணிகளைச் சுகாதாரத் துறை தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மறு நியமன முறையின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களின் வழிகாட்டுதல்களும், தடையற்ற மருத்துவச் சேவைகளும் பொதுமக்களுக்குத் துரிதமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT