இந்தியா

மேற்கு வங்கத்தில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் - மம்தா எதிர்ப்பு

குஜராத், அசாம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் பொது சிவில் சட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 29) பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவை வணிக ஆலோசனைக் குழு கூட்டத்தின் பின் மசோதா குறித்து விளக்கிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி,

குஜராத், அசாம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் பொது சிவில் சட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கு வங்கத்திலும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மசோதாவில் இடம்பெற்றுள்ள தனிமனித அடையாளம், சமத்துவம், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் தனிநபர் சட்டங்களுக்கும் மாநில அதிகாரத்திற்கும் இடையிலான உறவுகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து அவையில் விரிவாக விவாதிக்கப்படும்" என்றார்.

பாஜக ஆட்சிக்கு வாந்தால் மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மம்தா எதிர்ப்பு

இதனிடையே இதற்கு திரிணாமுல் காங்கிரஸ்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு எதிராகச் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு தனது கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மசோதா இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குவதால், இதுகுறித்து அவசரப்படாமல் பரந்த அளவிலான விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.